அமெரிக்க அயலுறவு இணையமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வேண்டுகோளுக்கு இணங்க, 123 அணுசக்தி ஒப்பந்தப் பணிகளைத் தொடங்குவதற்குச் சம்மதித்த நிக்கோலசுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
"123 அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைப்படுத்த படுவதற்கு காலவரையரை எதுவும் இல்லை. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும்வரை 'சிறப்பு பிரதிநிதி' என்ற பதவியில் நிகோலஸ் தனது பணிகளைத் தொடர்வார்." என்று அயலுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் மெக்கார்மெக் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ், தனிப்பட்ட காரணங்களால் நிக்கோலஸ் பர்ன்ஸ் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருப்பதைத் தெரிவித்தார்
இதையடுத்து, நிக்கோலஸ் வகித்த அயலுறவுத் துறை இணையமைச்சர் (அரசியல் விவகாரம்) பதவி, வில்லியம்ஸ் பர்ன்சுக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.