இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புவதாகவும், அதற்காக சர்வதேச விதிகளில் வரவிருக்கும் மாற்றங்களுக்காகக் காத்திருப்பதாகவும் பிரிட்டன் கூறியுள்ளது.
பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரெளன் திங்களன்று இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். தலைநகர் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்திக்கும் போது, பிரிட்டன் - இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் பற்றிப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாகவும் பேச்சு நடக்கவுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியாவிற்கான பிரிட்டன் தூதர் சர் ரிச்சர்ட் ஸ்டேக் கூறியதாவது :
இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான குடிமை அணுசக்தி ஒப்பந்தம் என்பது சர்வதேச விதிகளைப் பொறுத்து அமையக் கூடியது.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்த ஒப்பந்தம் தற்போது இல்லாத ஒத்துழைப்புகளை இரு நாடுகளுக்கும் இடையில் கொண்டுவர வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
இதைச் செயல்படுத்த தடையாக உள்ள சர்வதேச விதிகள் குறித்து, 45 நாடுகள் அணு எரிபோருள் வழங்கு நாடுகள் மற்றும் சர்வதேச அணுசக்தி முகமை ஆகியவற்றுடன் இந்தியா நடத்தும் பேச்சுகளின் முடிவைப் பொறுத்து, இந்தியா - பிரிட்டன் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் தற்போது இந்தியா பேசி வருகிறது. அதன் பிறகு, அணுசக்தி விடயத்தில் சர்வதேச நாடுகள் இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்வதற்குத் தடையாக உள்ள விதிகளைத் திருத்தும்படி அணு எரிபொருள் வழங்கு நாடுகளை இந்தியா கேட்டுக் கொள்ளும் என்று கருதுகிறோம்.
அதன் முடிவின் அடிப்படையில், இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள வாய்ப்புகள் குறித்து பிரிட்டன் தீவிரமாகப் பரிசீலிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.