ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களை ஒழித்து அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில் கூடுதலாக 3,200 படையினரை ஏப்ரல் மாதம் அனுப்ப அமெரிக்காவும், ஜெர்மனியும் முடிவு செய்துள்ளன.
இதில் அமெரிக்க வீரர்களே பெரும்பகுதி இருப்பார்கள். இவர்கள் ஆஃப்கானின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்திவரும் மற்ற படையினரோடு இணைந்து தாக்குதல் நடத்துவார்கள்.
குறைவான எண்ணிக்கையில் இருக்கப்போகும் ஜெர்மனி வீரர்கள், அண்மையில் திரும்பிச் சென்றுள்ள நார்வே வீரர்களுக்குப் பதிலாகப் பணியில் ஈடுபடுவார்கள்.
ஆஃப்கானில் ஏற்கெனவே 27,000 அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடத்திவரும் நிலையில், கூடுதல் படைகள் வேண்டும் என்று அங்குள்ள அமெரிக்க அதிகாரிகள் கடந்த 7 மாதங்களாக வேண்டுகோள் விடுத்துவந்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரத்தில் பல்வேறு நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் அமெரிக்கப் படையினரின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.