இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வாக சிறிலங்க அரசு உருவாக்கியுள்ள அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் வருகிற 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என்று அந்நாட்டு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொழும்பில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
இலங்கை இனப்பிரச்சனைக்கு அதிகாரப் பரவலாக்கல்தான் சரியான தீர்வு. எனவே, அதற்கான திட்டத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகிறது. எந்தக் கட்சி எதிர்த்தாலும், இத்திட்டம் வருகிற 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வைக்கப்படும்.
முன்னதாக, அனைத்துக் கட்சிக் குழுவினருடன் பேச்சு நடத்துவதன் மூலம், இத்திட்டத்தை எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய திட்டமாக உருவாக்கும் முயற்சிகளை அதிபர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்டு வருகிறார்.
இதற்காக, அதிபர் மகிந்த ராஜபக்ச பதவியேற்றதும் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் குழுவினர் தொடர்ந்து பல்வேறு கூட்டங்களை நடத்தியுள்ளனர். அதில் எடுக்கப்பட்ட பல முக்கிய முடிவுகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
சிறிலங்க அரசின் தீர்வுத் திட்டம் பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட பிறகு, அனைத்துக் கட்சிக் குழு கலைக்கப்படும். எல்லாத் தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வே தற்போதைய தேவையாகும்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக வெளியேறியதால் மோதல்கள் அதிகரித்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போதைய சூழ்நிலையை கலவரமாக வர்ணிக்க முயற்சிக்கக் கூடாது. 1983 ஆம் ஆண்டில் இருந்து 1994 ஆம் ஆண்டு வரை நாட்டின் அமைதி சீர்குலைந்து கிடந்ததை யாரும் மறந்துவிட முடியாது. அந்த சூழ்நிலை தற்போது ஏற்படவில்லை. எனவே மக்கள் பதற்றமடையத் தேவையில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.