Publish Date: Fri, 18 Jan 2008 (11:26 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:47 IST)
பாகிஸ்தானில் ஷியா பிரிவினரின் மசூதியில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி பலியானதுடன், 25 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானில் தலிபான், அல் கய்டா பயங்கரவாதிகளின் அரசுக்கு எதிரான போராட்டம் அதிகரித்து வரும் நிலையில், ஷியா- சன்னி பிரிவினருக்கு இடையிலான மோதல்களும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், பெஷாவர் நகரில் ஷியா பிரிவினரின் மிர்சா காசிம் இமாம்கார் மசூதியில் நேற்று தொழுகைகள் நடந்தன. அங்கு நடந்த கூட்டத்தில் மத குரு ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த மசூதிக்குள் நுழைய முயன்ற இளைஞரைக் காவல் துறையினர் வாசலிலேயே தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதற்குள் அந்த இளைஞர் துப்பாக்கியால் மத குருவை சுட முயன்றான்.
மேலும், தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டையும் வெடிக்கச் செய்தான். இத்தாக்குதலில், மசூதிக்கு வந்தவர்கள், காவலர்கள் உள்பட 12 பேர் உடல் சிதறி பலியானார்கள். 25-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதில் ஏராளமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
கடந்த ஆண்டு சன்னி பிரிவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிக்குப்பழி வாங்கவே இந்த தாக்குதல் நடந்துள்ளது என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.