Publish Date: Wed, 16 Jan 2008 (16:04 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:47 IST)
ஆப்கானிஸ்தான் எல்லையில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் தலிபான்களுக்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சரரோக கோட்டையை தலிபான்கள் கைப்பற்றுயுள்ளனர்.
தெற்கு வஜிரிஸ்தானின் முக்கிய நகரமான வானாவில் இருந்து 80 கி.மி. தொலைவில் உள்ள இந்த கோட்டையில் நேற்று இரவு தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 20ல் இருந்து 30 ராணுவத்தினர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாகவும், லதா கோட்டையை நெருங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தலிபான்கள் நடத்திய தாக்குதலை ஒப்புக்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அந்த கோட்டை அவர்களது கட்டுப்பாட்டிற்கு சென்று விட்ட தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சரரோகா கோட்டையில் நடந்த தாக்குதலில் ஆயிரம் தலிபான்கள் ஈடுபட்டதாகவும், 10 ராணுவத்தினரை அவர்கள் சிறைபிடித்துள்ளதாகவும் வானா பகுதியில் உள்ள பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த கோட்டையில் இருந்த தகவல்தொடர்பு நேற்று இரவு 9 மணிக்கு தடைபட்டதாக அப்பகுதி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அருகிலுள்ள மலையில் இருந்து தலிபான்கள் முதலில் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு நான்கு மணிநேரம் நடந்த சண்டையில் தலிபான்கள் கோட்டையை கைப்பற்றியுள்ளனர். பிறகு, கோட்டையில் இருந்து இன்று காலை வரை ஆயுதங்களை இடம் மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.