பெனாசிர் புட்டோ படுகொலை வழக்கு விசாரணையில் இணைந்து கொள்வதற்காக, மேலும் 3 ஸ்காட்லாண்ட் யார்ட் அதிகாரிகள் பாகிஸ்தான் வந்துள்ளனர்.
புகைப்படக் கலையில் நிபுணர்களான இவர்கள் மூவரும், ராவல்பிண்டியில் பெனாசிர் தாக்கப்பட்ட இடத்தில் உள்ள தடயங்களைப் புகைப்படம் எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
'தடயங்கள் எல்லாம் அழிந்த பிறகு, ஸ்காட்லாந்து யார்ட் காவலர்கள் எடுத்துவரும் 3டி புகைப்படங்களுக்கு ராவல்பிண்டி காவலர்கள் முழுமையாக உதவி வருகின்றனர்' என்று அவை விமர்சித்துள்ளன.
ராவல்பிண்டியில் முழுமையான ஆய்வு மேற்கொண்ட பிறகு, பெனாசிர் கடைசியாக எடுத்துச் செல்லப்பட்ட மருத்துவமனைக்குச் சென்ற அதிகாரிகள், அங்குள்ள மருத்துவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.
அறுவை அரங்கு, அவசர சிகிச்சைப் பிரிவு என எல்லா இடங்களையும் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஆனால் இதுவரை, பெனாசிருடன் இருந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிர்வாகிகளிடம் பாகிஸ்தான் அதிகாரிகளோ, ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரிகளோ விசாரணை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.