சீனா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று அந்நாட்டுப் பிரதமர் வென் ஜியாபோவைச் சந்தித்தார்.
அப்போது இருவரும், சர்வதேச விவகாரங்கள், இருதரப்பு பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர். இதன் விரிவான விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
இதையடுத்து, இருவரும் அவரவர் நாட்டுப் பிரதிநிதிகளுடன் தனித்தனியாகப் பேச்சு நடத்தி வருகின்றனர். இப்பேச்சுகளின் இறுதியில் பல்வேறு துறைகளில் 12 க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகரீதியான தடைகளை உடைப்பதற்கு தொழிற்துறையினர் முயற்சிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
தனது பயணம், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.