பெனாசிர் கொலை வழக்கை விசாரிக்க ஐ.நா.வை அனுமதிக்க மறுத்ததில் இருந்தே, அதில் பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்புள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி குற்றம் சாற்றியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹத்துல்லா பாபர் கூறுகையில், "பெனாசிர் கொலையில் அல் கய்டாவிற்குத் தொடர்பு உள்ளதென்றால், பாகிஸ்தானுக்கு வெளியில் உள்ள அமைப்பு என்ற முறையில் ஐ.நா. விசாரணை மிகவும் முக்கியம்" என்றார்.
பெனாசிர் கொலையில் ஐ.நா. விசாரணையை அனுமதிக்க முடியாது என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்பும், பாகிஸ்தான் விரும்பும் வரை விசாரணையில் தலையிட மாட்டோம் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனும் கூறியுள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பெனாசிர் ஒன்றும் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிரபலமானவர் அல்ல என்று முஷாரஃப் கூறியதையும் ஃபர்ஹத்துல்லா பாபர் கண்டித்துள்ளார்.
"பெனாசிர் ஆசியாவிலேயே பிரபலமான தலைவர். அவரின் மறைவுக்கு உலகமே இரங்கல் தெரிவித்தது. மிகவும் பிரபலமற்றவரும், வெறுக்கத்தக்க ராணுவ ஆட்சியாளருமான முஷாரஃப்புக்கு பெனாசிரின் பிரபலத்தைப் பற்றிப் பேசத் தகுதியில்லை.
மேலும், முஷாரஃப் தற்போது ராணுவப் பதவியில் இல்லை என்பதால், ராணுவத்தின் சார்பாக அவர் பேசுவதற்கு உரிமையில்லை." என்றார் ஃபர்ஹத்துல்லா.