இந்திய- சீன எல்லைப் பிரச்சனை குறித்து சீன பிரதமர் வென் ஜியாபோவுடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று நாள் பயணமாக சீனா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அங்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நேற்றிரவு சீனப் பிரதமர் வென் ஜியாபோ அளித்த விருந்தில் மன்மோகன் சிங் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், "சீன அதிபர் ஹூ ஜிந்தாவோவைச் சந்திப்பதற்கு முன்பு, இருதரப்பு வணிகத் தடைகளை நீக்குதல், எல்லைப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக சீனப் பிரதமர் வென் ஜியாபோவுடன் பேசுவேன்" என்றார்.
அதன்படி இன்று அவர் வென் ஜியாபோவுடன், எல்லைப் பிரச்சனை குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சு!
மேலும், எல்லைப் பிரச்சனை தொடர்பான பேச்சில் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான நடவடிக்கை தொடர்பாக இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதி எம்.கே.நாராயணன், சீனாவின் சிறப்புப் பிரதிநிதி தாய் பிங்குவோ ஆகியோர் இன்று பேசவுள்ளனர்.
சீனப் பிரதமரின் சிறப்பு விருந்தில் பங்கேற்ற இந்திய அயலுறவு அமைச்சக அதிகாரிகள் இத்தகவலைத் தெரிவித்தனர். அதேநேரத்தில் இந்தப் பேச்சு அதிகாரபூர்வமானதாக இருக்காது என்று அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் 1962 ஆம் ஆண்டில் இருந்து எல்லைப் பிரச்சனை நீடித்து வருகிறது. சுமார் 4,000 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லையில் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக இருதரப்பும் பரஸ்பரம் குற்றம்சாற்றி வருகின்றன.
கடந்த 1981 முதல் 1987 வரை நடந்த 8 சுற்று எல்லைப் பேச்சுகளிலும் தீர்வு ஏற்படவில்லை. பின்னர் அமைக்கப்பட்ட கூட்டுச் செயற்குழு, 1988 முதல் 2003 வரை 14 கூட்டங்களை நடத்தின. ஆனால் இதிலும் தீர்வு எட்டப்படவில்லை.
இறுதியாக இரண்டு நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். 2003 முதல் தற்போது வரை 11 சுற்றுப் பேச்சுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், எல்லைப் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்பிரச்சனையில், ஜம்மு- காஷ்மீர் மாநில எல்லையில் 43,180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று இந்தியாவும், அருணாச்சலப் பிரதேசப் பகுதியில் 90,000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்ற சீனாவும் குற்றம்சாற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.