அல் கய்டா தீவிரவாதிகளைப் பிடிக்க போகின்றோம் என்ற பெயரில் பாகிஸ்தான் அனுமதியின்றி அமெரிக்க இராணுவம் தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைவதை அத்துமீறலாகத் தான் பாகிஸ்தான் கருதும் என்று அதிபர் முஷாரஃப் கூறியுள்ளார்.
இது போன்ற முட்டாள்தனமான சாகசத்தை நிகழ்த்த ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் திட்டமிட்டுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கள் நாட்டு இராணுவத்தால் செய்ய முடியாததை, அமெரிக்க இராணுவத்தால் சாதிக்க முடியும் என்று அமெரிக்க அரசு நினைப்பது முற்றிலும் தவறான அணுகுமுறை என்று முஷாரஃப் கூறியுள்ளார்.
எங்கள் நாட்டு மலைமுகட்டில் காலை வைப்பவர்கள் யாரும் அந்த நாளை அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள் என்பதைச் சவாலாகவே சொல்வதாகவும் ஸ்டிரையிட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முஷாரஃப் கூறியுள்ளார். பாகிஸ்தானின் மலைப்பகுதியில் உள்ள மக்களிடம் அல்கய்டா ஆதரவு திரட்டுவதைத் தடுக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பென்டகன், அமெரிக்க உளவு அமைப்புக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியதாக இந்த மாத தொடக்கத்தில் நியுயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
அதிகாரப்பூர்வமற்ற வகையில் அமெரிக்க படைகள் உங்கள் எல்லைக்குள் நுழைவதை ஊடுருவலாக கருதுவீர்களா என்று கேட்டதற்கு, ஆம் என்று முஷாரஃப் பதிலளித்துள்ளார். எங்கள் அனுமதியின்றி எங்கள் நாட்டு எல்லைக்குள் வருவது, பாகிஸ்தானின் இறையாண்மையை மீறியதாகவே கருதப்படும் என்று கூறியுள்ளார். மலைமுகடுகள், கரடுமுரடான மலைப் பிரதேசங்களில் பாகிஸ்தான் வீரர்களைக் காட்டீலும் ஒன்றும் அமெரிக்க படைகள் சிறப்பாக அந்தப் பகுதியில் செயல்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படைகள் நுழைய நினைக்கும் பகுதி கரடுமுரடான மலைப்பகுதி. அங்கு தகவல் தொடர்பு வசதி குறைவு. அப்பகுதியில் உள்ள ஒவ்வொருவரிடமும் ஆயுதங்கள் உள்ளன. தங்களுடைய தனித்தன்மையை, பிறருடைய வருகையால் இழக்க அவர்கள் விரும்பவில்லை என்றும் முஷாரஃப் தெரிவித்துள்ளார்.