மலேசியாவில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராஃப் தலைவர்கள் 5 பேரும் திங்களன்று உயர்மட்ட விசாரணைக் குழுவின் முன்பு நிறுத்தப்பட உள்ளனர். அப்போது அவர்களுக்கான தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவழியினருக்குச் சமஉரிமை கோரிக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, தலைநகர் கோலாலம்பூரில் நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது.
இதையடுத்து அப்பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்த ஹிண்ட்ராஃப் அமைப்பின் நிர்வாகிகளான பி.உதயகுமார், வி.கணபதிராவ், டி.வசந்தகுமார், ஆர்.கங்காதரன், எம்.மனோகரன் ஆகிய 5 பேர், டிசம்பர் 13 ஆம் தேதி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இச்சட்டப்படி 5 பேரையும் எந்தவித விசாரணையும் இன்றி 2 ஆண்டுகள் சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தாய்பிங்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரும் திங்களன்று உயர்மட்ட விசாரணைக் குழுவின் முன்பு நிறுத்தப்பட உள்ளனர்.
இது குறித்து, ஹிண்ட்ராஃப் நிர்வாகிகளின் வழக்கறிஞர் கர்பால் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டுள்ள ஹிண்ட்ராஃப் நிர்வாகிகள் அனைவரும், நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட ஆலோசனைக் குழு முன்பு நிறுத்தப்படுவார்கள்.
அப்போது, ஹிண்ட்ராஃப் நிர்வாகிகள் சார்பில் கோவிந்த்சிங் தியோ, கர்பால் சிங், சிவநேசன், எம்.குலசேகரன் ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜராகிறார்கள்.
மூடிய அறையில் நடக்கவுள்ள விசாரணையின் முடிவில், ஆலோசனைக் குழுவினர் தங்கள் இறுதித் தீர்ப்பை மன்னருக்கு அனுப்பி வைப்பார்கள். ஹிண்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டால், மன்னர் அனைவரையும் விடுவிப்பார்" என்றார்.