தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசனை இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் லாஸ் ஜொகான் சொல்வ்பேக் சந்தித்துப் பேசினார்.
கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை தலைமையகத்தில் இன்று காலை 9.00 மணிக்கு நடந்த இந்தச் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது.
இதில், புலிகளின் தரப்பில் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகச் செயலர் சீவரத்தினம் புலித்தேவன், மனித உரிமை விவகாரங்களுக்கான செய்தித் தொடர்பாளர் நவரூபன் செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.
கண்காணிப்புக் குழுவின் தரப்பில் அதன் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது, புலிகளின் தரப்பில் கண்காணிப்புக் குழுவிற்கும் நார்வே அமைச்சகத்திற்கும் அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டது.
சிறிலங்கா அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறியதைத் தொடர்ந்து, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு சிறிலங்காவில் இருந்து வருகிற 16 ஆம் தேதி வெளியேறவுள்ள நிலையில் இச்சந்திப்பு நடந்துள்ளது.