பாகிஸ்தானில் லாகூர் உச்ச நீதிமன்றத்திற்கு அருகில் இன்று நடந்த தற்கொலைத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதுடன் 50 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
லாகூர் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்துவதற்காக இன்று காலை திரண்டிருந்தனர். இதை முன்னிட்டு ஏராளமான காவலர்கள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது, காவலர்களுக்கு நடுவில் மறைந்திருந்த தற்கொலைப் படை பயங்கரவாதி தன்னிடம் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான்.
இந்த பயங்கரத் தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், அதில் பெரும்பாலானவர்கள் காவலர்கள் என்றும் முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 50 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மேயோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு தொலைக்காட்சித் தகவல்கள் கூறின.
இத் தாக்குதலுக்கு தலிபான்கள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருந்தாலும் விசாரணைக்குப் பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.