பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் முகமது எல்பராடி கவலை தெரிவித்துள்ளதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் அரசு, "அணு ஆயுதங்கள் பல்லடுக்குப் பாதுகாப்பில் பாதுகாப்பாக உள்ளன" என்று கூறியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தானின் அயலுறவு அலுவலகச் செய்தித் தொடர்பாளர் முகமது சாதிக் கூறியதாவது:
ஐக்கிய நாடுகள் அவையின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச அணு சக்தி முகமை, தனது கருத்துகள் பற்றிக் கவனமாகப் பரிசீலித்து விட்டு அவற்றை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தேசிய கட்டுப்பாட்டு ஆணையத்தின் கண்காணிப்பில் இயங்கும் பாதுகாப்பு அமைப்புகளின் கீழ், பல்லடுக்குப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பற்றிய உண்மை நிலைகளை எல்பராடி மறந்துவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச அணு சக்தி முகமையுடன் பாகிஸ்தான் அதிகாரிகள் பேசி வருகின்றனர். எனினும், எல்பராடியின் கருத்துகளால் சர்வதேச அணு சக்தி முகமைக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள உறவுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
சர்வதேச அணு சக்தி முகமைக்கு முழு ஒத்துழைப்பையும், உதவிகளையும் பாகிஸ்தான் தொடர்ந்து வழங்குவதுடன், அவற்றை விரிவாக்கவும் முயற்சி எடுக்கப்படும்.
மேலும், சர்வதேச அணு சக்தி முகமையானது, ஆக்கபூர்வமான அணு சக்தி பயன்பாட்டு நிலையங்களைக் கண்காணிப்பது மட்டும் தான். இந்த எல்லைக்குள் எல்பராடியின் கருத்துகள் நிற்க வேண்டும்.