அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக நியூ ஹாம்ப்ஷயரில் நடந்த வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார்.
இத் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் 39 விழுக்காடு வாக்குகளையும், அவருடன் போட்டியிட்ட பாரக் ஒபாமா 36 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஹிலாரிக்கு மக்கள் செல்வாக்கு சரிந்து வருகிறது என்ற கருத்துக் கணிப்பு பொய்யாகியுள்ளது.
இதே போல குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் மெக் கெய்ன் 36 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி கண்டார். அவருடன் போட்டியிட்ட மிட் ரோம்னி 32 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றார்.
முன்னதாக அயோவா மாகாணத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி கருப்பினத்தைச் சேர்ந்தவரான பாரக் ஒபாமா பெரும் வெற்றியைப் பெற்றார். இந்த மாகாணத்தை ஒத்தே மற்ற மாகாணங்களின் முடிவுகளும் அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ளது. இத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக, மாகாணம் தோறும் அரசியல் கட்சிகளின் சார்பில் வாக்கெடுப்பு நடந்து வருகிறது.