பெனாசிர் புட்டோ கொலை வழக்கை விசாரிப்பதற்காக மேலும் 2 ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரிகள் இன்று பாகிஸ்தான் வந்தனர்.
மறைமுகமாகக் கேள்விகள் கேட்டுத் தகவல்களைப் பெறுவதிலும், நேர்காணல் முறையில் விசாரணை நடத்துவதிலும் இவர்கள் இருவரும் சிறந்தவர்கள் ஆவர்.
பாகிஸ்தானில் ஏற்கெனவே விசாரணை நடத்தி வரும் 5 அதிகாரிகளும், தொழில்நுட்பம் மற்றும் தடயவியலில் நிபுணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெனாசிர் புட்டோ கடந்த மாதம் 27 ஆம் தேதி ராவல்பிண்டி அருகில் உள்ள லியாகத் பாக் பூங்காவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் பாகிஸ்தான் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த 4 ஆம் தேதி ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரிகள் விசாரணையைத் துவங்கினர்.
மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்த இடத்தையும், குண்டுவெடிப்பில் சேதமடைந்த பெனாசிரின் வாகனத்தையும் முதலில் ஆய்வு செய்த அதிகாரிகள், பின்னர், தாக்குதலை நேரில் பார்த்தவர்களிடமும் பெனாசிரை பரிசோதித்த மருத்துவர்களிடமும், விசாரணை நடத்தினர்.
தற்போது வந்துள்ள 2 அதிகாரிகளும், தாக்குதலை நேரில் பார்த்த சாட்சிகளிடமும், அரசு தரப்பு அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.