இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலை மலேசியா மறுத்துள்ளது.
இது குறித்து, புது டெல்லியில் நடந்துவரும் அயல்நாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பங்கேற்ற மலேசிய அமைச்சர் டத்தோ சாமி வேலுவிடம், செய்தியாளர்கள் கேட்டதற்கு "மலேசியப் பிரதமர் அப்துல்லா படாவி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சகத்தின் தலைமைச் செயலர் ஆகியோருடன் நான் பேசினேன். அந்தத் தகவல் உண்மையல்ல. அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்றார்.
டத்தோ சாமி வேலுவின் கருத்தை, மத்திய அயல்நாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவியும் ஆமோதித்தார். "மலேசியப் பிரதமரிடம் பேசிய விவரங்களை டத்தோ சாமி வேலுவிடம் கேட்டேன். நாங்கள் அவரை நம்புகிறோம். மேலும் தகவல்கள் கிடைத்தால் பின்னர் தெரிவிக்கிறோம்" என்றார் அவர்.