பெனாசிர் படுகொலை செய்யப்பட்டதற்கு அவரேதான் பொறுப்பு என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் குற்றம்சாற்றி உள்ளது பற்றிக் கருத்துக் கூற அமெரிக்கா மறுத்துவிட்டது.
அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றுக்கு முஷாரஃப் அளித்த பேட்டியில், "பெனாசிருக்கு அச்சுறுத்தல் உள்ளதென்று அவரைப் பலமுறை நான் எச்சரித்தேன். ஆனால் அவர் அதை நிராகரித்து விட்டார். பெனாசிர் கொலையில் பாகிஸ்தான் அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. கொலைக்கு பெனாசிர்தான் பொறுப்பு" என்று கூறியிருந்தார்.
இதுபற்றி அமெரிக்க அரசின் அயலுறவு செய்தித் தொடர்பாளர் சென் மெக்கார்மக்கிடம் கேட்டதற்கு, "முஷாரஃப் தனது கருத்தைக் கூறியுள்ளார். ஆனால், பெனாசிரைக் கொன்றது யார் என்பதைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது. அதன் முடிவைத் தெரிந்து கொள்ளவும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படுவதை காண்பதற்கும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்" என்றார்.