பெனாசிர் புட்டோ படுகொலை வழக்கில் ஐ.நா. தன்னிச்சையாகத் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. நிராகரித்தது.
இது குறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பெனாசிர் படுகொலை உலகெங்கும் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. இவ்வழக்கு விசாரணையில் பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்ட் காவல் அதிகாரிகள் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இவ்வழக்கில் விசாரணைக்கு உதவுமாறு, முறைப்படியான கோரிக்கை எதுவும் பாகிஸ்தான் அரசிடம் இருந்து ஐ.நா.விற்கு வரவில்லை. இதனால் நான் கருத்து கூற முடியாது.
லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரிரி கொலை வழக்கில் ஐ.நா. தன்னிச்சையாகத் தலையிடவில்லை. லெபனான் அரசிடம் இருந்து முறைப்படி கோரிக்கை வந்ததால்தான் விசாரணையில் ஈடுபட்டோம்" என்றார்.
முன்னதாக, பெனாசிர் புட்டோ படுகொலை வழக்கில் ஐ.நா. தன்னிச்சையாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவரின் கணவர் ஆஷிப் அலி ஜர்தாரி கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.