சிறிலங்கா தலைநகர் கொழும்புவில் இன்று நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் அந்நாட்டு அமைச்சர் டி.எம்.தசநாயக்க கொல்லப்பட்டார். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.
சிறிலங்காவின் தேச மேம்பாட்டுத் துறை அமைச்சரான தசநாயக்க இன்று காலை புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அவரின் வாகன அணிவகுப்பு காலை 10.45 மணிக்கு, கொழும்பு யா எலப் பகுதியில் உள்ள முன்னாள் சிங்கள நடிகை ருக்மணி தேவியின் சிலைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது கண்ணிவெடித் தாக்குதல் நடந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த அமைச்சர் தசநாயக்க உடனடியாக ராகம மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் தசநாயக்கவின் பாதுகாவலர்கள் இருவர் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ராகம மருத்துவமனையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்கார கூறுகையில், "இது ஒரு கண்ணிவெடித் தாக்குதல். அமைச்சரின் வாகன அணிவகுப்பைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் உள்ளிட்ட 11 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனிளக்காமல் அமைச்சர் உயிரிழந்தார்." என்றார்.