இலங்கை இனப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், சிறிலங்கா அரசு தனது அதிகாரங்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி உள்ளது!
இதுகுறித்து ஸ்லோவேனியன் நாட்டை சேர்ந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் ஜெனெஸ் பொட்டோக்னிக் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்களைப் பாதுகாத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக வெளியேறியுள்ளதால், மோதல் தீவிரமடையும். இந்த மோதல்களில் பெருமளவிலான மக்கள் கொல்லப்படலாம்.
போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்துள்ளதால், அமைதிப் பேச்சுக்கான வழிகள் மேலும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு சிறிலங்காவில் இருந்து வெளியேறுவது கவலை அளிக்கும் விடயமாகும்.
விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா அரசு தனது அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். அமைதிப் பேச்சுகள் மீண்டும் தொடங்கப்படுகையில், குறிப்பிடத்தக்க அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் தீர்வுத் திட்டத்தை சிறிலங்கா அரசு முன்வைக்க வேண்டும். இருதரப்பும் அரசியல் தீர்வை நோக்கிச் செயலாற்றினால் தான், சிறிலங்காவில் நிரந்தர அமைதி உருவாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.