சர்வதேச பயங்கரவாத இயக்கமான அல் கய்டாவின் தலைவன் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று அந்நாட்டு அதிபர் முஷாரஃப் கூறியுள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டனில் சி.பி.எஸ். தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பேசிய முஷாரஃப் கூறியதாவது:
ஒசாமா பின்லேடன் வேறெந்த நாட்டிலும் பதுங்கியிருக்க வாய்ப்பில்லை என்பதை நான் ஏற்க மாட்டேன். நான் வேண்டுமானால் சவால் விடுகிறேன். பின்லேடன் பாகிஸ்தானில் இருக்கிறான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
நாங்கள் குறிப்பாக பின்லேடனை மட்டும் தேடவில்லை. தலிபான்கள், அல் கய்டா இயக்கத்தினர் என பயங்கரவாதிகள் அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த நடவடிக்கையின் போக்கில், ஒருவேளை பின்லேடன் பாகிஸ்தானில் இருப்பதாகத் தெரிந்தால் அவனையும் தேடுவோம்.
பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் நடத்திவரும் போரில் இதுவரை 7,000 அல் கய்டா தலைவர்கள் கைது செய்யப்பட்டு அல்லது வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதை பாகிஸ்தான் மட்டும்தான் செய்துள்ளது. வேறெந்த நாடாவது இதைச் செய்துள்ளதாகக் கூற முடியுமா?
பெனாசிர் புட்டோ படுகொலைக்கும் அல் கய்டா தான் காரணம். பாகிஸ்தானில் சட்டம் செயலற்று இருக்கும் பழங்குடியினர் பகுதியில், அவர்களை இயக்கிவரும் உள்ளூர் பயங்கரவாதி ஃபைதுல்லா மசூத்திற்கு இதில் தொடர்புள்ளது.
தலிபான்கள் தலைமறைவாகி விட்டாலும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கின்றன. அவர்கள் மீண்டும் பலம்பெற நாங்கள் காரணமல்ல. ஆஃப்கானிஸ்தான் தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.