வாழ்நாள் முழுவதும் ஒரே அறையில் வாழ்க்கை வாழமுடியுமா? அளவுக்கு அதிகமான செல்வங்கள் வாழ்க்கையில் வரும்போதும், பணி உயர்வு, பதவி கிடைத்து விட்டால் நம்மில் பலருக்கு தலைகால் புரியாத நிலை வந்துவிடும். ஆனால் நல்ல வளமான வாழ்க்கை கிடைத்த பின்பும் கூட தான் பிறந்த அறையிலேயே 100 ஆண்டுகளைக் கடந்து முதியவர் ஒருவர் வாழ்வது ஆச்சரியமானது தானே.
இங்கிலாந்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த 1908 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி தாம் பிறந்த அறையிலேயே இன்று வரை வாழ்ந்து வருகிறார். விவசாயத் தொழிலில் ஈடுபட்டு ஓய்வு பெற்ற டக்ளஸ் மேத்யூஸ் என்பவர்தான் அவர்.
கடந்த 1934 ஆம் ஆண்டு மேபல் என்ற பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்ட டக்ளஸ் மேத்யூசுக்கு அந்த ஆண்டில் 250 ஏக்கர் அளவிலான பண்ணை வீட்டை வாங்கும் அதிர்ஷ்டம் கிடைத்த பின்பும் அந்த அறையை விட்டு வெளியேற மனம் இடம் கொடுக்கவில்லை.
கடந்த 1996 ஆம் ஆண்டு டக்ளஸ் மேத்யூஸ் மனைவி மேபல் இறந்த பின்னும் அவர் அந்த அறையை விட்டு வேறு அறைக்கு இடம் பெயரவில்லை. இதனிடையே ஆரம்பத்தில் இருந்து கட்டில், படுக்கை உள்ளிட்ட பொருட்களையும், உள்ங அலங்காரங்களையும் டக்ளஸ் மாற்றிக் கொண்டு அதே அறையில் வசித்து வருகிறார்.
எங்கள் வீட்டில் உள்ள அறைகளிலேயே மிகவும் அழகானது எங்கள் தந்தையின் அறை தான் என்று அவரது மகன்களான ஸ்டேவர்ட்டான், டேவோன் கூறுகின்றனர். எனவே அவர் தனது அறையை மாற்ற விருப்பப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
தான் இருக்கும் அறை தான் சிறந்தது என்றும், கடந்த காலங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டபோதும், தமக்கு, தான் தங்கியிருந்த அறையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை, அதேபோல இந்த வயதுக்கு பின்னர் அறையை மாற்ற வேண்டிய தேவை எதுவும் இருப்பதாக தோன்றவில்லை என அவர் கூறியதாக 65 வயதான அவருடைய மகள் சூசன் கூறியுள்ளார்.
அந்த அறையை விட்டு டக்ளஸ் மேத்யூஸ் உயிரோடு வாழும் வரை அந்த அறையை விட்டு வேறு அறைக்குப் போகப்போவதில்லை. ஒருவேளை அந்த அறையை விட்டு டக்ளஸ் வேறு இடத்திற்கு செல்வாரென்றால் அது கல்லறைத் தோட்டத்துக்கு சவப்பெட்டிக்குச் செல்லும் கடைசிப் பயணமாகத் தான் இருக்கும் என்று சூசன் தெரிவித்துள்ளார்.