Publish Date: Mon, 07 Jan 2008 (12:26 IST)
Updated Date: Mon, 07 Jan 2008 (12:25 IST)
ஜனநாயகத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால், சர்வதேச விதிகளையும், நாட்டின் சட்ட திட்டங்களையும் சிறிலங்கா அரசு மதித்து நடக்க வேண்டும் என்று ஃபிரான்ஸ் எச்சரித்துள்ளது.
ஃபிரான்ஸ் நாட்டின் மனித உரிமைகள் மற்றும் அயலுறவு அமைச்சர் ரமா யாட், சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசு தன்னிச்சையாக வெளியேறியது மிகவும் கவலை அளிக்கிறது. இனப்பிரச்சனைக்கு பேச்சின் மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும்.
இலங்கையில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களை நாங்கள் கண்டிக்கிறோம். ஐக்கிய நாடுகள் அவையின் செயல் திட்டங்களுக்கு சிறிலங்கா அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஜனநாயகத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால், சர்வதேச விதிகளையும், உள்நாட்டு சட்ட திட்டங்களையும் சிறிலங்கா அரசு மதிக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கும் : ஆஸ்ட்ரேலியா!
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக வெளியேறி இருப்பது, பொது மக்களுக்கு எதிரான வன்முறைகளை அதிகரிக்கச் செய்யும் என்று ஆஸ்ட்ரேலியா கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆஸ்ட்ரேலிய அயலுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி ஆஸ்ட்ரேலிய அரசுக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக வெளியேறி இருப்பதன் மூலம், மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கும்.
இதைத் தடுக்க வேண்டுமென்றால், இலங்கையில் வாழும் மக்களின் உரிமைகளை போரிடும் தரப்புகள் மதிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கையின் இனப் பிரச்சனையை பேச்சின் மூலம் மட்டுமே தீர்க்க முடியும். ராணுவ வழியிலான தீர்வுகள் பெரும் அழிவையே தரும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம்.
இதனால், ஜனநாயகமான முறையில் அரசியல் தீர்வு காண்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
அதுவே, சிறிலங்கா மக்கள் அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றுவதற்கு உதவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.