பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ராணுவத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
ஸ்வாத் பள்ளத்தாக்கில் உள்ள கபால் தெஹசில் பகுதியில் கடந்த 2 நாட்களாக தாலிபான்களுக்கும் பாகிஸ்தான் படையினருக்கும் கடுமையான மோதல் நீடித்து வருகிறது.
இதை முன்னிட்டு, அப்பகுதி முழுவதும் காலையிலும் மாலையிலும் குறிப்பிட்ட சில மணி நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று மட்டா, கபால் ஆகிய கிராமங்களில் மறைந்திருக்கும் தாலிபான்களின் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் 9 தாலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், 2 பேர் படுகாயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால், இத்தகவலை மறுத்துள்ள தாலிபான்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இது தவிர, தாலிபான்களை வழிநடத்துவதாகக் கருதப்படும் மதகுரு மெளலானா ஃபாசுல்லாவைப் பின்பற்றும் 60 தாலிபான்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.