பெனாசிர் புட்டோ கொலை வழக்கு விசாரணையை விரைவாக முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் இடைக்கால அரசின் பிரதமர் முகமதுமியான் சூம்ரோவிற்கு அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரஃப் உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் உதவுவதற்காக வந்துள்ள ஸ்காட்லாந்து யார்ட் காவல் துறை அதிகாரிகள் இன்று தங்கள் பணியைத் தொடங்கினர்.
இந்நிலையில், விசாரணை மிகவும் மந்தமாக நடப்பதாகக் கருத்துத் தெரிவித்துள்ள முஷாரஃப், விசாரணையை விரைவில் முடிப்பதற்கு வசதியாக ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரிகளுக்குத் தேவையான எல்லா ஒத்துழைப்புகளையும் முழுமையாகத் தருமாறு பிரதமர் சூம்ரோவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள பொதுத் தேர்தல், அடுத்த வாரம் வரவுள்ள முகரம் பண்டிகை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அமைதியை உருவாக்கவே, முஷாரஃப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று 'டான்' நாளிதழ் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ராணுவத் தளபதி அஷ்ஃபாக் பர்வேஷ் கியானி, உள்துறை அமைச்சர் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் உள்படப் பலர் பங்கேற்றனர்.