Publish Date: Sat, 05 Jan 2008 (17:54 IST)
Updated Date: Sat, 05 Jan 2008 (17:53 IST)
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலைக்கு ஒசாமா பின்லேடனோ அல்லது அல் கய்டா இயக்கமோ பொறுப்பேற்றதாக கூறப்படும் தகவல்கள் பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டோனி ஃபிராட்டோ கூறுகையில், "பெனாசிர் படுகொலையில் அல் கய்டாவுக்குத் தொடர்பிருப்பது பற்றிய தகவல்கள் எதுவும் எங்கள் பார்வைக்கு வரவில்லை. நாங்கள் அதற்காகத்தான் காத்திருக்கிறோம்" என்றார்.
அதேநேரத்தில், அல் கய்டா மற்றும் தலிபான்கள் ஆகிவற்றின் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ள ஃபிராட்டோ, பாகிஸ்தான் தலைமைப் பொறுப்பில் யார் இருந்தாலும் அவருடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்புப் போரைத் தொடர்வதே அமெரிக்காவின் நிலைப்பாடு என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, பெனாசிர் புட்டோ கொல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே, அவரைத் தாக்கியது அல் காய்டாதான் என்றும், அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அல் கய்டா இயக்கத் தலைவர்களில் ஒருவனான பைதுல்லா மசூத்தின் உரையாடல் என்ற ஆதாரத்தையும் பாகிஸ்தான் வெளியிட்டது.
ஆனால் அல் காய்டா இயக்கம் அதனை மறுத்தது. பெனாசிர் கொலையை மறைக்க பாகிஸ்தான் அரசு நடத்தும் நாடகம் என்று பைதுல்லா மசூத் கூறியிருந்தார்.