Publish Date: Sat, 05 Jan 2008 (13:02 IST)
Updated Date: Sat, 05 Jan 2008 (13:02 IST)
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக விலகிக் கொண்டதால் இலங்கையில் மோதல் மேலும் தீவிரமடையும் என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிறிலங்கா அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து, சிறிலங்கா அரசு தன்னிச்சையாக விலகியுள்ளது மிகவும் கவலை அளிக்கிறது.
இதனால் இலங்கையின் வடக்கில் மோதல்கள் தீவிரமடைவதுடன், அது கொழும்பு உட்பட நாடு முழுவதும் பரவும் அபாயம் எற்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் சென்றடைய அனுமதிக்க வேண்டும்.
மேலும், இலங்கையில் நடக்கும் மோதல்களுக்கு விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு ஐ.நா. கூறியுள்ளது.
அமைதி முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு: ஜப்பான் உறுதி
சிறிலங்கா அரசு தனது முடிவைக் கைவிட்டு அமைதி முயற்சிகளுக்குத் திரும்பினால் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம் என்று ஜப்பான் உறுதியளித்துள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் அயலுறவு அமைச்சர் மசாகிகோ கொமுரா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இனப் பிரச்சினையை ராணுவ வழிகளில் தீர்க்க முடியாது. இனப் பிரச்சனைக்கு வன்முறைகள் மூலம் தீர்வு காணும் முயற்சிகளைக் கைவிட்டு, பேச்சுக்களின் மூலமான அரசியல் தீர்வை காண எல்லாத் தரப்பினரும் முன்வர வேண்டும் என ஜப்பான் கேட்டுக்கொள்கின்றது.
அமைதி முயற்சிகளுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். அதிகாரப் பகிர்வுத் தீர்வு திட்டம் விரைவாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
சிறிலங்கா அரசின் முடிவு மோதல்களை தீவிரமடையச் செய்வதுடன், அதிக வன்முறைகளுக்கும் வழிவகுக்கும். எனவே பொதுமக்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படுவதுடன், அமைதி முயற்சிகளும் பாதிக்கப்படும்.
இதனால் சிறிலங்கா அரசு தனது முடிவைக் கைவிட்டு அமைதி முயற்சிகளுக்குத் திரும்பினால், அதற்கான ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Sat, 05 Jan 2008 (13:02 IST)
Updated Date: Sat, 05 Jan 2008 (13:02 IST)