பெனாசிர் புட்டோ கடைசியாகப் பங்கேற்ற பேரணியில் அவருடன் இருந்த உதவியாளன் பற்றிப் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பெனாசிரின் கொலையில் அவனுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பெனாசிர் புட்டோவின் பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மான் மாலிக்கின் பரிந்துரையின் பேரில் உதவியாளன் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டவன் காலித் ஷாகின் ஷா. இவன் எப்போதும் பெனாசிருடன் இருந்து பணிவிடைகள் செய்து வந்துள்ளான்.
ராவல்பிண்டியில் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு பெனாசிர் பங்கேற்ற பேரணியிலும் காலித் ஷாகின் ஷா இருந்துள்ளான். அப்போது அவனின் நடவடிக்கைகள் சந்தேகத்தைத் தூண்டும் விதத்தில் இருந்துள்ளது.
பெனாசிர் பேசிக் கொண்டிருந்தபோது, இவன் அங்கும் இங்கும் ஓடியபடி இருந்துள்ளான். மேடையில் பெனாசிருக்குப் பின்னால் படபடப்புடன் நின்ற காலித்துக்கு அதிகமான வியர்வை வழிந்துள்ளது. முடிந்தவரை பெனாசிருக்கு முன்னதாக அவரின் வாகனத்திற்குள் சென்று ஒளிந்துகொள்ள முயற்சித்துள்ளான்.
இதையெல்லாம் பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் காலித்தைப் பற்றி விசாரித்துள்ளனர். ஆனால், அவர்களின் சந்தேகத்தை பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் மறுத்து விட்டனர்.
பெனாசிர் கொல்லப்பட்ட பிறகு, இரண்டு நாட்களுக்கு அவரின் கணவர் ஆஷிப் அலி ஜர்தாரியின் வீட்டில் தான் காலித் தங்கியுள்ளான். பெனாசிரின் இறுதிச் சடங்கிற்கு வராத காலித், மூன்றாவது நாள் பெனாசிரின் சமாதிக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுத் தலைமறைவாகி விட்டான்.
பேரணியில் காலித் நடந்துகொண்ட விதங்கள் அனைத்தும் உள்ளூர்த் தொலைக்காட்சி ஒன்றில் பதிவாகியுள்ளது. இதனால் காலித்தைப் பிடித்தால் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.