பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கையின் 80வது ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தெரியவந்துள்ளது!
கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ரோஹித போகல்லகாமா, "பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறும் இலங்கையின் சுதந்திர தின பொன்விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வார் என்று சிறிலங்க அரசு ஒருபோதும் கூறவில்லை" என்று கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளில் இலங்கைக்கு வரவில்லை என்றும், இந்த ஆண்டில் அவர் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறிய போகல்லகாமா, இதுவரை அவரின் வருகை குறித்து எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.
வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், தங்கள் நாட்டிற்கு வருமாறு சிறிலங்க அரசு விடுத்த அழைப்பை பிரதமர் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் இலங்கைக்கான இந்தியத் தூதர் கூறியுள்ளார்.
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வாக அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றை ராஜபக்ச அரசு வேகமாக உருவாக்கி வருகிறது என்றும், இந்தியப் பிரதமரின் வருகையின் போது இறுதி செய்யப்படும் என்றும் சில செய்திகள் வந்த நிலையில், சிறிலங்க அயலுறவு அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.