பெனாசிர் புட்டோ படுகொலையில் பாகிஸ்தான் அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மறுத்துள்ள நிலையில், இந்த வழக்கை விசாரிப்பதற்காக, புகழ்பெற்ற ஸ்காட்லாந்து யார்ட் காவல் துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகள் வந்துள்ளனர்.
இஸ்லாமாபாத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முஷாரஃப், பெனாசிர் புட்டோ கொலையில் பாகிஸ்தான் ராணுவத்திற்கோ, உளவுத் துறைக்கோ தொடர்பில்லை என்று மறுத்தார்.
"ராணுவமும், உளவு நிறுவனங்களும் தங்களைத் தாக்கும் நபர்களின் (பயங்கரவாதிகள்) துணையுடன் தங்களின் சதிச் செயலை நிறைவேற்றி உள்ளதாகக் கூறுவது நல்ல நகைச்சுவை.
பெனாசிர் புட்டோவின் உயிருக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஆபத்து உள்ளதால், காரின் மேற்புறத்தில் ஏறி நின்று பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று அரசு எச்சரித்தது. ஆனால், பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் அதை நிராகரித்துவிட்டனர்.
முன்னாள் பிரதமருக்கு உரிய எல்லா பாதுகாப்புகளும் பெனாசிருக்கு தரப்பட்டது. பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்ததாகக் கூறுவது தவறு.
பாகிஸ்தான் மக்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெனாசிர் படுகொலையில் பாகிஸ்தான் அரசின் எந்த நிறுவனத்திற்கும் தொடர்பில்லை என்று அவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.
இதனால் தான் பெனாசிர் கொலை வழக்கு விசாரணையில் அயல்நாட்டு உதவியை நாங்கள் நாடியுள்ளோம். அயல்நாட்டு அதிகாரிகள் தடவியல் மற்றும் தொழில்நுட்ப அளவில் உதவி செய்வார்கள்" என்றார் முஷாரஃப்.
இதற்கிடையில், பிரிட்டனின் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து யார்ட் காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 5 அதிகாரிகள் இன்று இஸ்லாமாபாத் வந்துள்ளனர். செய்தியாளர்களின் எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை.