பாகிஸ்தானின் இரட்டை நகரங்களான ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத்தில் 7 தற்கொலைப் படையினர் ஊடுருவியிருப்பதாக அந்நாட்டு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள முக்கியத் தலைவர்களின் அலுவலகங்களைக் குறிவைத்து தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 7 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் காவல்துறை தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம், உச்ச நீதிமன்றம், ராணுவத் தலைமை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் காவலர்களுடன் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எந்த உளவு நிறுவனமும் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று இஸ்லாமாபாத் காவல்துறை தலைவர் ஷாகித் நதீம் பலோச் கூறியுள்ளார்.