கென்யாவில் கடந்த 4 நாட்களாக நடந்துவரும் தேர்தல் வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 342 ஆக உயர்ந்துள்ளது.
அண்மையில் நடந்த கென்ய அதிபர் தேர்தலில் கிபாகி 47 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் அவர் முறைகேடுகள் மூலம் வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாற்றின.
அதிபர் தேர்தலில் 44 விழுக்காடு வாக்குகளுடன் 2 ஆவது இடம் பிடித்த ரய்லா ஒடிங்கா தரப்பினர் வன்முறையில் இறங்கினர். இதையடுத்து கிபாகி தரப்பினரும் பதிலடி கொடுக்கத் தொடங்கினர்.
கடந்த 4 நாட்களாக நடந்துவரும் வன்முறைகளில் இதுவரை 342 பேர் பலியாகியுள்ளனர். இதில் இன்று மட்டும் 70க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
கிக்கியூஸ் இனத்தை சேர்ந்த கிபாகியும் லியூ இனத்தைச் சேர்ந்த ஒடிங்காவும், அதிபர் பதவிக்காக மோதிக் கொள்வதால், தேர்தல் கலவரமானது இனக்கலவரமாக உருமாறியது.
லியூ இன மக்கள் அதிகமாக வசிக்கும் நைரோபி மற்றும் மேற்குப் பகுதியிலும், கிக்கியூஸ் இனத்தவர் அதிகமாக வசிக்கும் மத்தியப் பகுதியிலும் கலவரம் அதிகமாகப் பரவியுள்ளது.
இதற்கிடையில், கென்யா தலைநகர் நைரோபியில் நாளை லட்சக்கணக்கானோர் பங்கேற்கவுள்ள பேரணியை நடத்தப் போவதாக ரய்லா ஒடிங்கா அறிவித்துள்ளார்.
இந்தப் பேரணியின் மூலம் ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போவதாக ஒடிங்கா கூறியுள்ளார். ஆனால், இந்தப் பேரணியின் போது பெரும் கலவரம் வெடிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.