இலங்கை இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சிறிலங்க அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாக சிறிலங்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது!
2002 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்க அரசு விலகிக் கொள்வதாக அதிகாரப்பூர்மான கடிதத்தை, இருதரப்பினருக்கும் இடையே அனுசரணையாளராக பணியாற்றி வந்த நார்வே நாட்டின் இலங்கைக்கான தூதர் டோர் ஹாட்ரமிடம் சிறிலங்க அயலுறவு அமைச்சர் ரோகித போகல்லகாமா கையளித்தார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் முடிந்து 16 ஆம் தேதி அன்று முறைப்படி ஒப்பந்தத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வதாக அக்கடிதத்தில் சிறிலங்க அரசு குறிப்பிட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிப்படி, அதிலிருந்து விலகிக்கொள்வதானால் 14 நாட்கள் முன்னறிவிப்பு கொடுத்து செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனையின்படி 16 ஆம் தேதி போர் நிறுத்தத்தில் இருந்து விலகுகிறது.
2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்க ராணுவத்திற்கும் நடைபெற்று வரும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்பொழுது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றுவது என்கின்ற வெளிப்படையான நோக்கத்துடன் சிறிலங்காவின் முப்படைகளும் தாக்கி வருவதால் கடும் போர் நடந்துவரும் சூழ்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவை நேற்று இரவு சிறிலங்க அமைச்சரவை எடுத்தது.
இலங்கை இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இனப்பிரச்சனைக்கு ராணுவ ரீதியிலான தீர்வு காணும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்று சிறிலங்க அதிபர் மகிந்தா ராஜபக்சே அறிவித்ததையடுத்து அதிகாரப்பூர்வமாக போர் நிறுத்தத்தில் இருந்து சிறிலங்க அரசு விலகிக்கொண்டுள்ளது மோதலின் மூலம் புலிகளை ஒடுக்குவது என்கின்ற முடிவிற்கு வந்துள்ளதையே காட்டுகிறது.
இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் இந்தியா, தற்பொழுது அந்தப் பாதையில் இருந்து சிறிலங்க அரசே விலகிச் செல்வதால், அந்நாட்டு சுதந்திர தின நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வதும் சர்ச்சைக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.