இலங்கை, மன்னாரில் இன்று அதிகாலை சிறிலங்கா ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 10 படையினர் கொல்லப்பட்டதுடன் 15 படையினர் காயமடைந்தனர்.
மன்னார் மேற்கு பாலைக்குழி அணைக்கட்டுப் பகுதியில் அதிகாலை 5.30 மணிக்கு, விடுதலைப் புலிகளின் நிலைகளைக் கைப்பற்றும் நோக்குடன் சிங்களப் படையினர் தாக்குதலைத் தொடங்கினர்.
விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது ஏவுகணைகள், வெடிகுண்டுகள், இயந்திரத் துப்பாக்கிகள், சிறியவகை பீரங்கிகள் எனப் பலவகையான ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட விடுதலைப் புலிகள் திருப்பித் தாக்கத் தொடங்கினர். காலை 11.30 மணி வரை நீடித்த மோதலில் பெரும் இழப்புகளைச் சந்தித்த ராணுவத்தினர் பின்வாங்கினர்.
இந்த மோதலில் 10 படையினர் கொல்லப்பட்டதுடன், 15 படையினர் படுகாயமடைந்ததாகவும், தங்கள் தரப்பில் இழப்பேதும் இல்லையென்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதென்று சிறிலங்கா அமைச்சரவை முடிவு செய்துள்ள நிலையில் நடந்துள்ள இம்மோதல், மன்னார் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.