தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களின் ஆயுதங்களைக் கீழே வைத்தால் அவர்களுடன் பேசத் தயார் என்று சிறிலங்கா அரசு கூறியுள்ளது.
இதுகுறித்துக் கொழும்பில் இன்று சிறிலங்கா அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்ப செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்றிரவு நடந்த இந்த ஆண்டிற்கான முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு விலகுவதற்கான தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
செயல்பாடற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து பின்பற்றுவதால் எந்தவிதமான பயனும் இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசு விலகுவது தொடர்பான சட்டபூர்வமான நடவடிக்கைகளை, பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தலைமையிலான குழுவும் அயலுறவு அமைச்சகமும் மேற்கொள்ளும்.
இப்போதைய சூழலில் புலிகளுடன் பேசுவது அர்த்தமற்றது. நிலைமைகள் மாறி அவர்கள் ஆயுதங்களை கீழே வைத்தால் அவர்களுடன் பேசுவதற்கு அரசு தயாராக உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்வது தொடர்பாக அமைச்சரவையில் எதுவும் பேசவில்லை. அதற்கான தேவை இப்போது இல்லை. அவசியம் ஏற்பட்டால் அது பற்றி பின்னர் ஆராய்வோம்.
இவ்வாறு அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்ப கூறினார்.