சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தை கைவிடுவதென்று சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது.
நேற்று (புதன்கிழமை) மாலை நடந்த சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா அரசின் இந்த முடிவானது, தற்போது நடந்துவரும் போரை மேலும் தீவிரப்படுத்துவதற்கான முன்னறிப்பு என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக நேற்று மாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை கைவிடுவதற்கான ஆலோசனையை சிறிலங்கா பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க முன்வைத்தார்.
இந்த யோசனையை அமைச்சரவை ஏற்றுக் கொண்டதையடுத்து அதிபரும், முப்படைகளின் தளபதியுமான மகிந்த ராஜபக்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதற்கான உத்தரவை பிறப்பித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நார்வே அரசுக்குத் தகவல்!
இதுகுறித்து, போர் நிறுத்தம் உருவாவதற்குப் பெரிதும் துணைநின்ற நார்வே அரசிற்கு அதிகாரபூர்வ தகவல் இன்று அனுப்பப்படும் என்று சிறிலங்கா அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கேகலிய ரம்புக்வெல கூறுகையில், சிறிலங்கா அரசின் முடிவு குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு விளக்கமளிக்கப்படும் என்றார்.
"போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது எழுத்தின் மட்டும்தான் உள்ளதே தவிர அதனால் எந்தப் பலனும் இல்லை. சிறிலங்காவில் தற்போது நிலவும் சூழ்நிலைகளின் அடிப்படையில், நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது." என்றார் கேகலிய ரம்புக்வெல.
சிறிலங்காவில் 2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியபோது பிரதமரான அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியில், 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கையெழுத்திட்டார்.
ஆனால், 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அதிபரான பிறகு, போர் நிறுத்த ஒப்பந்தம் வெறும் எழுத்தளவில் மட்டுமே என்று மாறிப்போனது. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாற்றி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பி.பி.சி. நிறுவனத்திற்கு கேகலிய ரம்புக்வெல அளித்துள்ள பேட்டியில், "போர் நிறுத்த ஒப்பந்தத்தை 10,000 க்கும் அதிகமான முறை விடுதலைப் புலிகள் மீறிவிட்டனர். இதனால் எங்களுக்கு ஒப்பந்தத்தை கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்றார்.
இதற்கிடையில், சிறிலங்கா ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் நடந்த மோதல்களில் மட்டும் சுமார் 5,000 பேர் பலியாகியுள்ளனர்.
2006 ஆம் ஆண்டு மத்தியில் இருந்து இருதரப்புக்கும் இடையிலான போர் மிகவும் உக்கிரமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.