பாகிஸ்தான் பொதுத் தேர்தல் பிப்ரவரி 18 ஆம் தேதி நடக்கும் என்று அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொல்லப்பட்டதை அடுத்து நடந்த கலவரத்தில் ஏராளமான தேர்தல் அலுவலகங்கள் சேதமாகி உள்ளதால், முன்பு அறிவித்தபடி ஜனவரி 8 ஆம் தேதி தேர்தல் நடத்த முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குவாஷி முகமது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெனாசிர் புட்டோ கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாலும், அடுத்த வாரம் மொஹரம் பண்டிகை வருவதாலும் தேர்தல் பிப்ரவரி 18 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது என்றார்.
மேலும், அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் வகையில் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் மற்றும் வெளிப்படையான முறையில் நடைபெறுவதை ஆணையம் உறுதி செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஆனால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதுடன், அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பின் உருவப் பொம்மைகளையும் எரித்தனர்.
தேர்தலைத் தள்ளிவைக்கும் முடிவில் பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ.யின் சதி இருப்பதாக, நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகள் குற்றம்சாற்றியுள்ளன.