சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று காலை ராணுவத்தினரை ஏற்றிவந்த பேருந்தை குறிவைத்து நடத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 2 ராணுவத்தினர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 23 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில், கொழும் தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கொழும்பில் பாதுகாப்பு அதிகமுள்ள நிப்பான் விடுதிப் பகுதியில், சிறிலங்கா ராணுவம் மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் இருந்து சில மீட்டர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இதையடுத்து ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று கோயிலில் வைத்து தமிழ் எம்.பி. மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பலிவாங்கும் வகையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மகேஸ்வரனை சுட்டுக்கொன்ற கொலையாளியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை முடிந்த பின்புதான் முழுவிவரங்கள் தெரியவரும் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.