மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அறிவிப்புகள் அனைத்தையும் தமிழிலும் வெளியிட வேண்டும் என்று அந்நாட்டு இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ருதி மன்றத்தின் தலைவர் ததின் சேரி இந்திராணி சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மலேசியாவில் வசிக்கும் இந்தியர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள்.
இவர்கள் இந்தியாவிற்குச் செல்லும் போதும், இவர்களின் உறவினர்கள் மலேசியாவிற்கு வரும் போதும், விமான நிலையத்தில் மொழி தெரியாமல் திண்டாடுகிறார்கள்.
இதனால் கோலாலம்பூர் விமான நிலையத்தில் எல்லா அறிவிப்புகளையும் தமிழிலும் வெளியிட வேண்டும். இதற்கு விமான நிலைய ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விமானப் புறப்பாடு, வருகை தொடர்பான தகவல்களைத் தமிழ் பயணிகள் அவர்களின் தாய் மொழியிலேயே பெறுவதற்கு ஏற்ற வகையில் தகவல் மையம் அமைக்க வேண்டும். அங்கு தமிழ் தெரிந்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.
இவ்வாறு இந்திராணி சாமி கூறினார்.