Publish Date: Sun, 30 Dec 2007 (15:00 IST)
Updated Date: Sun, 30 Dec 2007 (15:00 IST)
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் இஜாஷூல் ஹக் வீட்டிற்கு அருகில் 2 தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து இறந்தனர்.
பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (காயித்) கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தற்கொலைப் படை பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால், அவர்கள் அனைவருக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் பஹவால் நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் இஜாஷூல் ஹக் வீட்டிற்கு வெளியில் இரண்டு மர்ம நபர்கள் நின்று கொண்டிருப்பதை பாதுகாப்பு படையினர் கவனித்தனர்.
இதையடுத்து அவர்களைப் பிடித்து விசாரிக்க முயன்றபோது, மர்ம நபர்கள் இருவரும் தங்களிடமிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து இறந்தனர்.
இதில் யாருக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.