பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று அல் காய்டா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பைதுல்லா மெசூத் தெரிவித்துள்ளார்.
பெனாசிர் கொலைக்கு அல் காய்டா இயக்கம் பொறுப்பேற்றுள்ளது என்று அந்த இயக்கத்தின் பேச்சாளர் என்று கூறிக்கொண்ட ஒருவன் பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றிற்க்கு தெரிவித்ததாக வந்த செய்திகளையடுத்து அல் காய்டா இயக்கம் அதிகாரப்பூர்வமாக இந்த மறுப்பை வெளியிட்டுள்ளது.
அல் கய்டா இயக்கத்தின் முக்கிய தலைவர்களான பைதுல்லா மெசூத் மற்றும் மவுல்வி சாகிப் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உரையாடலை இடைமறித்துக் கேட்டதாக கூறி உரையாடல் தொகுப்பு ஒன்றை பாகிஸ்தான் அரசு இன்று வெளியிட்டது.
இந்நிலையில், மறைவிடத்தில் இருந்து செய்தி ஊடகம் ஒன்றிடம் பைதுல்லா மெசூத் சார்பில் தொலைபேசியில் பேசிய அவரின் செய்தித் தொடர்பாளர் மெளல்வி உமர், "பாகிஸ்தான் அரசின் கூற்றை நாங்கள் வன்மையாக மறுக்கிறோம். பழங்குடியினருக்கு எனத் தனிப்பட்ட மரபுகள் உள்ளன. நாங்கள் ஒருபோதும் ஒரு பெண்ணைக் கொல்ல மாட்டோம்" என்றார்.
"பாகிஸ்தான் அரசு, ராணுவம் மற்றும் உளவுப் பிரிவு ஆகியவை சேர்ந்து மேற்கொண்ட சதித் திட்டம்தான் பெனாசிர் கொலை. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உரையாடல் தொகுப்பு ஒரு நாடகமாகும்.
பெனாசிர் பாகிஸ்தானுக்கு மட்டுமல்லாமல் உலகப் புகழ் வாய்ந்த தலைவராகவும் விளங்கினார்.அவர் கொல்லப்பட்டது குறித்து நாங்கள் அதிர்ச்சியும் , துயரமும் அடைந்துள்ளோம்" என்றும் மெளல்வி உமர் கூறியுள்ளார்.
பெனாசிரைப் பாதுகாக்கும் விடயத்தில் தோல்வியடைந்துவிட்ட தனது நிர்வாகத்தைக் காப்பாற்றும் முயற்சியில் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் இறங்கியுள்ளார் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.
அல்காய்டா உரையாடல்!
முன்னதாக, பெனாசிர் புட்டோ கொல்லப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், அல் காய்டா இயக்கத்தின் மூத்த தலைவர்களான பைதுல்லா மெசூத் மற்றும் பின்லேடனுக்கு அடுத்த நிலையில் உள்ள மவுல்வி சாகிப் ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடலை இடைமறித்து கேட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அந்த தொலைபேசி உரையாடல் வருமாறு:
மவுல்வி சாகிப் : வாழ்த்துக்கள் ! இப்பொழுதான் இரவில் அது ( பெனாசிர் கொல்லப்பட்ட தகவல் ) எனக்கு கிடைத்தது.
பைதுல்லா மெசூத் : உங்களுக்கும் வாழ்த்துக்கள் ! அவர்கள் ( பெனாசிரை கொன்றவர்கள் ) நம் ஆட்கள்தானா ?
மவுல்வி சாகிப் : ஆமாம் , அவர்கள் நம் ஆட்கள்தான்.
பைதுல்லா மெசூத் : யார் அவர்கள் ?
மவுல்வி சாகிப் : சயீத் மற்றும் பதார் பகுதிகளைச் சேர்ந்த இக்ரமுல்லா, பிலால் என்ற இரண்டு பேர்கள்தான் அவர்கள் !
பைதுல்லா மெசூத் : அப்படியானால் பாராட்டுக்கள் !
பைதுல்லா மெசூத் : இது ஒரு மாபெரும் முயற்சி.அவரை ( பெனாசிரை ) கொன்ற அந்த பையன்கள் உண்மையிலேயே தைரியசாலிகள்தான் !
மவுல்வி சாகிப் : மாஷா அல்லா ( கடவுளுக்கு நன்றி ). நான் அங்கு வரும்போது அனைத்து விவரங்களையும் தருகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.