பெனாசிர் புட்டோவின் தலையில் துப்பாக்கி குண்டு துளைத்திருந்த காயத்தை தான் பார்த்ததாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷெர்ரி ரகுமான் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பெனாசிர் புட்டோவின் இறுதிச் சடங்கு நடந்தபோது, அடக்கத்திற்காக அவரின் உடலைக் குளிப்பாட்டும் போது காயத்தைப் பார்த்ததாக ஷெர்ரி ரகுமான் கூறியுள்ளார்.
"பெனாசிரின் உடலை நல்லடக்கத்திற்காக குளிப்பாட்டும் குழுவில் நானும் இருந்தேன். அப்போது பெனாசிரின் தலையில் துப்பாக்கி குண்டு துளைத்த காயம் இருந்ததைப் பார்த்தேன்.
அந்தக் குண்டு பெனாசிர் தலையின் பின்புறம் நுழைந்து மறுபுறம் வெளியேறி இருந்தது. அந்தக் காயத்தினால் பெனாசிரின் உடலை எங்களால் முழுமையாகக் குளிப்பாட்டக் கூட முடியவில்லை.
பெனாசிரின் உடலில் இருந்து ஏராளமான ரத்தம் வெளியேறியதால்தான் அவர் இறந்துள்ளார்.
பெனாசிரின் வாகன அணிவகுப்பில் நானும் முக்கியப் பங்கு வகித்தேன். துப்பாக்கிச் சூடு நடந்தபோதும், வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தபோதும் நான் பெனாசிருக்கு பக்கத்தில்தான் இருந்தேன்.
என்னுடைய காரில்தான் பெனாசிரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். மருத்துவ அறிக்கையை மாற்றித் தரும்படி மருத்துவமனைக்கு நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
காரில் இருந்த சூரிய ஒளிமறைப்புத் தகடு பட்டுத்தான் பெனாசிரின் உயிர் பிரிந்தது என்று பாகிஸ்தான் அரசு சொல்வது முட்டாள்தனமானது. உண்மைகளை மறைப்பதற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் முயற்சிக்கிறது. இது ஆபத்தானது." என்றார் ஷெர்ரி ரகுமான்.