புலிகளின் குரலை சிறிலங்கா அரசினால் எளிதில் நசுக்கிவிட முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன் கூறியுள்ளார்.
இலங்கை வவுனியாவில், 'புலிகளின் குரல்' வானொலி நிலையத்தின் மீது சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்காக நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நடேசன் இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசியதாவது:
''கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி மாவீரர்களைப் போற்றும் புனிதமான நாள். மாவீரர்களின் நினைவுடன் மக்கள் அகவணக்கம் செலுத்தும் நாள். இந்நாளில் புலிகளின் குரலை நசுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கோழைத்தனமான செயலை சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ளது.
இத்தாக்குதல் 10 உயிர்களை இழக்கச் செய்திருக்கிறதே தவிர, அரசின் நோக்கம் எதுவும் நிறைவேறவில்லை.
புலிகளின் குரலை, தமிழர்களின் சுதந்திரக் குரலை கோழைத்தனமான அரசினால் எளிதில் நசுக்கிவிட முடியாது. உலகத் திசை எங்கும் புலிகளின் குரல் தொடர்ந்து ஒலிக்கும்.
புலிகளின் குரல் தமிழ் மக்களை எழுச்சியூட்டி சுதந்திர விடுதலையை வென்றேடுக்கும் வரை தொடர்ந்து ஒழிக்கும்" என்றார் நடேசன்.