பாகிஸ்தானில் நேற்று படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் உடல் இன்று மாலை தொழுகைக்குப் பிறகு அவரது சொந்த ஊரில் தந்தையின் கல்லறை அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
பெனாசிரின் சொந்த ஊர் சிந்து மாகாணத்தில் உள்ள கர்ஹிருதா பாக்ஸ் என்ற கிராமமாகும். லர்கானா மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்திற்கு இன்று அதிகாலை பெனாசிரின் உடல் ராணுவ ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்டது.
துபையில் இருந்து விமானம் மூலம் வந்த அவரது கணவர் ஆசிப் அலி மற்றும் பிள்ளைகள் பிலவால், பக்தவார் மற்றும் ஆசிபா ஆகியோர் பெனாசிரின் சவப் பெட்டியுடன் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டனர்.
மதியம் 2 மணிக்கு பல்லாயிரக்கணக்கான பாகிஸ்தான் மக்கள் கட்சி தொண்டர்கள் புடைசூழ, பெனாசிர் உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
காரிகுடா பக்ஷ் என்ற இடத்தில் உள்ள பெனாசிர் குடும்பத்துக்குச் சொந்தமான சமாதிக்கு கொண்டுவரப்பட்ட அவரின் உடல், அங்கு அவரின் தந்தை ஜூல்ஃபிகார் அலியின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, சிந்து மாகாணம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதற்றமான இடங்களில் குவிக்கப்பட்ட துணை ராணுவத்தினருக்கு கண்டவுடன் சுடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.