சிறிலங்கா அரசு தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி கூட்டு ஸ்தாபனச் செய்தி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த அமைச்சர் மெர்வின் சில்வாவும், அவரின் ஆதரவாளர்களும் செய்தியாளர்களைத் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இம்மோதலில் அமைச்சர் மெர்வின் சில்வா காயமடைந்தார்.
இந்நிகழ்வு குறித்து இலங்கையிலிருந்து வெளியாகும் ஊடகங்கள் தெரிவித்துள்ள விவரங்கள் வருமாறு:
மாத்தறையில் நேற்று தான் பங்கேற்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியவாறு ரூபவாஹினி நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்த நாடாளுமன்ற விவகார துணையமைச்சர் மேர்வின் சில்வாவும், அவரின் ஆதரவாளர்களும் அங்கிருந்த செய்தி ஆசிரியர் எம்.ஜி.சந்திரசேனவை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதைப்பார்த்த ரூபவாஹினி பணியாளர்கள் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேர்வின் சில்வாவையும் அவரது குழுவினரையும் ரூபவாஹினி நிறுவனத் தலைவரின் கட்டுப்பாட்டு அறைக்குள் அடைத்து முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து மேர்வின் சில்வாவின் குழுவினருக்கும் ரூபவாஹினி பணியாளர்களுக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி வன்முறை வெடிக்கும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்துத் தகவலறிந்ததும், காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இருந்தாலும், மேர்வின் சில்வா பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் அவரை விடுவிக்க மாட்டோம் என்று பணியாளர்கள் உறுதியாக நின்றதால் அங்கே பதற்றம் அதிகரித்தது.
சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மேர்வினை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயற்சித்தனர். ஆனால், பணியாளர்கள் அதற்கு விடவில்லை.
இதையடுத்து தகவல்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன நிகழ்விடத்திற்கு வந்தார். அவர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கையைக் கண்டித்ததோடு அவரை காவல்துறையிடம் ஒப்படைக்குமாறு பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் மேர்வின் சில்வா பகிரங்க மன்னிப்பு கேட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் சிலர் கூறினர். ஆனால் இதனை ஏற்காத பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து பணியாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மேர்வின் சில்வாவை காவல்துறையினர் பலவந்தமாக அவரது வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயற்சித்தனர்.
அப்போது மேர்வின் சில்வா மீதும் அவரது குழுவினர் மீதும் அங்கிருந்த பணியாளர்கள் கடுமையான தாக்குதலை நடத்தினர். இதில் தலையில் காயமடைந்த மேர்வின் சில்வா கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.