சவுதியில் பணியாற்றும் அயல்நாட்டு மருத்துவர்களின் குடும்பத்தினர், இனிமேல் தங்கள் நாட்டில் உள்ள தூதரகங்களில் சவுதிக்கான விசாவை வாங்கிக் கொள்ளும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சவுதி அரேபியாவில் பணியாற்றும் அயல்நாட்டு மருத்துவர்களின் குடும்பங்கள் சவுதிக்கு வரவேண்டும் என்றால், குறிப்பிட்ட மருத்துவர் சவுதியில் உள்ள குடியுரிமை அலுவலகத்தில் கால்கடுக்க நின்று நுழைவு விசாவைப் பெற வேண்டும்.
ஆனால், புதிய திட்டத்தின்படி மருத்துவர்கள் காத்திருக்கத் தேவையில்லை. அவர்களின் குடும்பத்தினர் தாங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள சவுதி தூதரகத்தை அணுகி விசாவைப் பெற்றுக் கொள்ளலாம்.
விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள இத்திட்டத்தினால் இந்திய மருத்துவர்கள் உள்பட 7,000 க்கும் மேற்பட்ட அயல்நாட்டு மருத்துவர்கள் பயனடைவார்கள் என்று சவுதி அயலுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.