இலங்கையில் தமிழ்க் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருப்பது குறித்து செய்தி சேகரிக்க சென்ற பிரான்ஸ் செய்தியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் '24 நியூஸ்' தொலைக்காட்சி நிறுவனத்தின் பெண் செய்தியாளரான கப்பு சினி ஹென்றி, தொலைக்காட்சி படப்பிடிப்பாளரான சி.சைமன் ஆகிய இருவரும் அண்மையில் கொழும்பு வந்தனர்.
கொழும்பில், கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தொடர்பாக விவரண செய்தித் தொகுப்பொன்றை பிரான்ஸ் '24 நியூஸ்' தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தயாரிக்கும் முயற்சியில் இவர்கள் இருவரும் ஈடுபட்டனர்.
இதற்காக சிறை வைக்கப்பட்ட தமிழர்களை சந்திப்பதற்காக தங்கள் உறவினர்களுடன் கொழும்பில் உள்ள தங்கும் விடுதி ஒன்றின் வாகனத்தை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு காலி, பூசா முகாமிற்கு சென்றனர்.
பூசா முகாமிற்குச் சென்ற இவர்கள் அங்கு சோதனைக்கு பின்னர் கைதிகளை சந்தித்தனர். அதன் பின்னர் அவர்கள் கொழும்பு திரும்பிக் கொண்டிருந்தபோது ராணுவம் அவர்களை வழிமறித்து கைது செய்தது.
நேற்று முன்தினம் மாலையில் கைது செய்யப்பட்ட இவர்கள், இரவு 7.00 மணியளவில் ரத்தகம காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு இரு செய்தியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர், நடத்துனர், கைதிகளின் பெற்றோர் 12 பேர் என மொத்தம் 16 பேர் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று அடுத்தகட்ட விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.