பாகிஸ்தானில் தீவிரவாதத்தை சர்வாதிகாரம்தான் வளர்த்துள்ளது என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ சாடியுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் பெனாசிர் புட்டோ இன்று லாகூரில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, சர்வாதிகாரி ஒருவர் பதவியில் இருப்பதை பாகிஸ்தான் மக்கள் கட்சி என்றும் அனுமதிக்காது என்று குறிப்பிட்ட அவர், தனது தந்தை ஜூல்ஃபிகார் அலி புட்டோ சர்வாதிகாரத்தை எதிர்த்ததால்தான் தூக்கிலிடப்பட்டார் என்றார்.
பாகிஸ்தானை நவீன உலகத்திற்கு அழைத்துச் செல்லவே பாகிஸ்தான் மக்கள் கட்சி விரும்புகிறது என்று கூறிய பெனாசிர், சர்வாதிகாரிகள் எப்போதும் மக்களை நவீனத்தில் இருந்து ஒதுக்கி வைக்கவே விரும்புகின்றனர் என்று குற்றம்சாற்றினார்.
"தனது மக்கள் வானொலிகளை வாங்குவதையோ, அதில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கேட்கவோ ஜியா உல் ஹக் அனுமதிக்கவில்லை. ஏனெனில், அயல்நாட்டு நிகழ்ச்சிகளைக் கேட்கும் மக்கள் தனக்கெதிராகத் திரும்பி விடுவார்களோ என்று அவர் பயந்தார்.
பாகிஸ்தானுக்கு உள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் பயங்கரவாதமாகும். மசூதிகளில் நடத்தப்படும் குண்டுவெடிப்புகள் இஸ்லாமுக்கு எதிராக நடத்தப்படும் சதிச்செயல்களாகும்." என்றார் பெனாசிர்.